மயிலாடுதுறை: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த நிவாரணம் காசோலையை திருப்பி கொடுத்தது ஏன் என்பது குறித்து மீனவர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
மயிலாடுதுறையில் மார்ச் 4ந்தேதி நடைபெற்ற அரசு விழாவில், மீனவர்களுக்கு இழப்பீடாக வழங்குவதாக அறிவித்திருந்த ரூ. 5லட்சத்துக்கு பதிலாக ரூ. 2 லட்சம் காசோலை மட்டுமே வழங்கியதற்கு பூம்புகாரை சேர்ந்த மீனவர் ரமேஷ், முதலமைச்சர் ஸ்டாலினிடம் விழா மேடையிலேயே புகார் அளித்தார். பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பி கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலானது. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில், மீனவர் ரமேஷ் திமுகவினரால் தாக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது மேலும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ரமேஷ் தரப்பில், விசைப்படகு சேதமடைந்ததற்கு ரூ.5 லட்சம கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை உடனே எடுக்கவில்லை என்றும், பல முறை மனு அளித்த பிறகு நிவாரணத் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் நடைபெற்று 2 வருடம் கழித்து, தாமதமாக வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே வழக்குகின்றனர், முழு தொகையும் கிடைக்கவில்லை என முதல்வரிடம் மனக் குமுறலை வெளிப்படுத்தியதாகவும், அதற்கு முறையான பதில் கிடைக்காததால், அதே மேடையிலேயே காசோலையை திருப்பி ஒப்பத்ததாக கூறப்பட்டது.
முன்னதாக, மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டர். மேலும் இயற்கை பேரிடரில் சேதமடைந்த படகுகளுக்கு 2 லட்சம் நிவாரண தொகையை மீனவர்களுக்கு வழங்கினார். நிவாரண தொகை வாங்கிய மீனவர் ரமேஷ் என்பவர் மீண்டும் அதே மேடையில் வைத்து முதல்வர் ஸ்டாலினிடம் திருப்பி கொடுத்தார்.
இந்த மீனவர் பெயர் ரமேஷ். இவர் பூம்புகார் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருடைய விசைப்படகு இயற்கை பேரிடரால் சேதமடைந்த நிலையில், அவருக்கு நிவாரணத் தொகையாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட அவர், முதல்வரிடம் ஏதோ சொல்லிக்கொண்டே மீண்டும் அந்தக் காசோலையை முதல்வரிடம் திருப்பி கொடுத்தார். ஆனால் முதல்வர் காசோலையை வாங்கவில்லை. அதன் பிறகு அருகில் நின்ற அமைச்சர் எ.வ.வேலுவிடம் கொடுத்தார், அவரும் வாங்கவில்லை. பின்னர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் கொடுக்க.அதை வாங்கிய அவர் அருகில் இருந்த அன்பில் மகேஸிடம் கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது.
ரமேஷின் செயலால் மேடையின் கீழ் நின்ற தி.மு.க-வினர் ஆத்திரமடைந்தனர். பின்னர் கீழே இறங்கி வந்த ரமேஷை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.மேலும் திமுகவினரால் ரமேஷ் தாக்கப்பட்டார் என்ற செய்திகள் பரவியது.
இதனை தொடர்ந்து வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022ம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் ரமேஷ் தனக்கு வழங்கப்பட்ட காசோலையை திருப்பிக் கொடுத்துவிட்டார். இதையடுத்து அவரை அங்கே இருந்த தி.மு.க.,வினர் தாக்கியதாக கூறப்படுகிறது.மத்தியில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த திமுக, தற்போது, இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக. மீனவரை தாக்கிய தி.மு.க.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் ரமேஷ் வேறுவிதமான தகவலை தெரிவித்தார். நான் பரம்பரை திமுக காரன். முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நிவாரண ஆணையில் பெயர் மாறி இருந்த காரணத்தினாலேயே அதனை திருப்பி கொடுத்தேன். வேற எந்த காரணமும் இல்லை. நிவாரணத் தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி என கூறிவிட்டு விறுவிறுவென சென்று விட்டார். இதுவும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.