சென்னை: தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வெளியிட கூடுதல் கால அவகாசம் கோரிய பாரத ஸ்டேட் வங்கியை கடுமையாக விமர்சித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வங்கி தொழிலில் இருக்க தகுதியற்றது எஸ்பிஐ என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்தியஅரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டத்தை பிப்ரவரி 15 அன்று, ரத்து செய்த உச்சநீதிமன்றம், அது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று கூறியதுடன், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகக் கூறியது. இத்திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்றும், அரசியல் கட்சிகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு இடையே க்விட் சார்பு ஏற்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.
தேர்தல் பத்திர நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி சார்பில், பத்திரங்கள் குறித்து வெளியிட அவகாசம் கோரப்பட்டு உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் SBI 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது. வங்கியின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் SBI முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது என்றும், தேர்தல் பத்திரங்கள் மூலம் தரவுகளை சேகரிக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது, ஆனால், வங்கி தரப்பில் 4 மாதம் தேவை என அவகாசம் கோரப்பட்டு உள்ளது. தரவுகளை நாளைக்கே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், அதை வெளியிட வங்கி நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என்றுவர், அதற்கு தகுதி இல்லை என்றால், எஸ்பிஐக்கு வங்கி தொழிலிலேயே இருக்கக்கூடாது என்று சாடினார்.
“நாங்கள் அரசியல் செய்வது கொள்கைக்கும் தத்துவத்திற்கும் மட்டுமே; அரசியலுக்கு வந்த இலக்கினை நிறைவேற்றுவதே நல்ல அரசியல்வாதிக்கு அடையாளம்” என்றார்.
மதுரையில், பிரதமருடனான சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், மதுரை வந்த பிரதமர் மோடியை அரசு சார்பில் வரவேற்க சென்றேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன். இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது. பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவுபோல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர் என்று கூறினார்.