டில்லி
நேற்று வெளியான பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியலில் பல திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.
விரைவில் நடைபெற உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவடே வெளியிட்டார்.
இதில், 34 மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களின் பெயர்களும் 2 முன்னாள் முதல்வர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதன்படி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இருந்தும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
பாஜகவின் முக்கிய பிரமுகர்களான அமித்ஷா காந்திநகரில் இருந்தும், ராஜ்நாத்சிங் லக்னோவில் இருந்தும் மன்சுக் மாண்டவியா போர் பந்தர் தொகுதியில் இருந்தும், கிரண் ரிஜிஜூ அருணாசலம் மேற்கு தொகுதியில் இருந்தும், ஜோதிராதித்ய சிந்தியா குணா தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் முதல்வர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்களான மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியிலிருந்தும், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் திரிபுரா மேற்கு தொகுதியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.
இந்த பட்டியலில், திரை நட்சத்திரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அமேதி தொகுதியிலிருந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, மதுரா தொகுதியிலிருந்து நடிகை ஹேம மாலினி மற்றும் நடிகர் மனோஜ் திவாரி வடகிழக்கு டெல்லி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
கேரளாவின் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். விரைவில் நடிகர் அக்சய் குமாருக்கு சாந்தினி சவுக் தொகுதியும், நடிகை கங்கான ரணாவத்துக்கு மண்டி தொகுதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.