பெங்களூரு நகரின் புறநகர் பகுதிகளான ஒயிட்ஃபீல்டு, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்த ஆண்டு நகரின் மையப் பகுதிகளான ஜெயா நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் குடியிருப்புகள் மற்றும் கட்டுமானப் பணிகள் காரணமாக நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் நிலத்தடி நீரின் அளவு குறைந்ததும் போதுமான மழை இல்லாததாலும் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது.
இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த ஆண்டு கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து டேங்கர் லாரிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், நகரின் தேவைக்கு ஏற்ப காவிரியில் தண்ணீர் இருப்பதாக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு சங்கங்கள் தனியார் டேங்கர் லாரிகளின் அடாவடி குறித்து புகார் அளித்ததை தொடர்ந்து தனியார் டேங்கர் லாரிகளை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளதாக இன்று செய்தியாளர்களிடம் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
“தண்ணீர் விநியோகிக்கும் லாரிகள் வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் பெறுவதாக புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து பெங்களூருவில் உள்ள அனைத்து தண்ணீர் டேங்கர்களும் மார்ச் 7 ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளோம். பெங்களூருவில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மார்ச் 4-ம் தேதி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். குடிநீர் பிரச்சனையை சமாளிக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா ரூ.10 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.