பெங்களூரு:  மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பிற்கும், பெங்களூரு உணவக குண்டு வெடிப்பிற்கும் தொடர்பில்லை எனவும், உணவக குண்டுவெடிப்பில் எந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில்  நேற்று இரவு வெடிகுண்டு வெடித்து சிதறியது.  இதில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வெடிவிபத்து, முதலில், சமையல் எரிவாயு  கியாஸ் சிலிண்டர் வெடிப்பு  என கருதப்பட்ட நிலையில், விசாரணையின்போதுதான், அது வெடிகுண்டு என்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது, ஒரு நபர் அங்கு வந்து உணவருந்தி விட்டு, தான் கொண்டு வந்த வெடிகுண்டு பையை வைத்து செல்வது கண்டறியப்பட்டது.

மேலும்,  போலீஸார் நடத்திய ஆய்வில்,  டிபன் பாக்ஸில் இருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நடந்தது உறுதியாகியுள்ளது. டிஜிட்டல் டைமர் மூலம் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது பலவீனமாக இருந்ததால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதில் பல்ப் இழை தான் டெட்டனேட்டராகச் செயல்பட்டதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். குண்டுவெடித்த இடத்தில் ஆணிகள், இரும்பு துண்டுகள் ஆகியவை கண்டறியப்பட்டதால் இது மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸார் சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில், 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வெடித்தது வெடிகுண்டு தான் என உறுதி செய்துள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா இது தொடர்பாக தற்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் மங்களூருவில் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பிலும் இதே முறை பின்பற்றப்பட்டு இருந்த நிலையில்,   இந்த இரண்டு குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்குப் பல ஒற்றுமைகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகமது ஷாரிக் கைது செய்யப்பட்டுள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அவரிடம் இப்போது பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாகவும் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களையும் தொடர்பு படுத்தி, கர்நாடகா மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இநத் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா,  பாஜக ஆட்சி காலத்தில் மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவத்திற்கும், இந்த குண்டுவெடிப்பிற்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை.  அதுபோல, பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் எந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை எனவும் கூறினார்.

மேலும், இந்த வெடிகுண்டு  விவகாரத்தை பாஜக அரசியலாக முயற்சிப்பதாகவும், அதனை அரசியலாக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு வெடித்த இடத்தை துணை முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே பாதுகாப்பு கருதி, பெங்களூருவில் உள்ள அனைத்து ராமேஸ்வரம் கபே கிளைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.