சென்னை: திமுக முன்னாள் அயலக அணி அமைப்பாளரும்,  போதைபொருள் கடத்தல் மன்னனுமான  ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்ய வலைவிரித்துள்ள காவல்துறையினர், அவருக்கு  எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளனர்.

கடந்த வாரம் மேற்கு டெல்லியில் கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் அதனுடன்  தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ அளவில் போதையூட்டும் வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என விசாரணையில் தெரியவந்தது.  இந்த கும்பல் டெல்லியில்  உள்ள கைலாஷ் நகரில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குஜராத் உள்பட பல பகுதிகளில் போதைப்பொருள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து  திமுகவின் அயலக அணி அமைப்பாளளராக இருந்த ஜாபர் சாதிக் தலைமறைவானார். அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக அறிவித்தது.

ஜாபர் சாதிக் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில்தான் ஜாபர் சாதிக் கும்பல் பிடிபட்டது. இதையடுத்து,  தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சம்மனை, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும், புரசைவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் போலீசார் ஒட்டியுள்ளனர். அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்,   வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதன்மூலம், இனி எந்த விமான நிலையத்துக்கு ஜாபர் சாதிக் சென்றாலும் உடனடியாக அவர் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவார்.