நெல்லை: குலசை ராக்கெட் ஏவுதளம், பசுமை ஹைட்ரஜன் கப்பல் உள்பட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மத்தியஅரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் மறைக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டியவர், தமிழ்நாடு வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிகின்றனர் என்றும் கூறினார்.

தூத்துக்குடி நிகழ்ச்சியில், வணக்கம் எனக்கூறி  தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய மோடி.  மேடையில் அமர்ந்திருந்த அனைவர் பெயரையும் குறிப்பிட்ட நிலையில்,  தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பெயரையும், அமைச்சர் எ.வ.வேலு பெயரையும் கூறாமல் தவிர்த்து விட்டார்.

  • குலசேகரப்பட்டினத்தில்  ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். குலசேகரப்பட்டினம் ஏவுதளம் ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகளை விண்ணிற்கு அனுப்பும் திறனுடையது.
  • கொச்சியில் நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிதுறைமுக சரக்கு பெட்டக முனையம் அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • ரூ.124.32 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
  • ரூ.7,055 கோடியில் வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்.
  • மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் 4வழிச்சாலையை தொடங்கிவைத்தார்.
  • நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பிரிவின் இருவழிப் பாதை, ஜித்தண்டஹள்ளி-தருமபுரி 4வழிச்சாலை தொடங்கப்பட்டது

2 நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று மாலை, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைப் பயண நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து  இரவு மதுரை சென்றடைந்தார். மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, இன்று (பிப்.28) மோடி தூத்துக்குடி, திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுகிறார். தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதள மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குலசை ராக்கெட் ஏவுதளம்  பகுதியில் 2000 பரப்பளவில் விண்வெளி பூங்காவை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.  குலசேகரப்பட்டினம், அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன தொடர்ந்து பல்வேறு திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

முன்னதாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், தூத்துக்குடி, நெல்லை – ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்”. பல்லடத்திலும், மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றதாகவும்,  சற்று நேரத்தில் தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி 17 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாகவும்,  தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை  ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

தூத்துக்குடியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதுடன், திட்டம் தொடர்பான விழாவில் அந்த தொகுதி எம்.பி. கனிமொழி பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை 9.15மணி அளவில் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சென்றார். 10 மணி அளவில் தூத்துக்குடி வந்த பிரதமரை,  இஸ்ரோ தலைவர் சோம்நாத், மாவட்ட ஆட்சியர் மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.

தூத்துக்குடியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலில்  தேசிய கீதம்,  தொடர்ந்த, தமிழ்த் தாய் வாழ்த்துடன் மோடி நிகழ்ச்சி தொங்கியது.  நிகழ்ச்சியில், ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு  நீர்வழிக் கப்பல்  பிரதமர் தொடங்கி வைத்தார். மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஓட்டன்சந்திரம்- மடத்துக்குளம் 4 வழிச்சாலை , நாகை – தஞ்சை, தேசிய நெடுஞ்சாலை பிரிவின் இருவழிப் பாதை, ஜித்தண்டஹள்ளி- தருமபுரி 4 வழிச்சாலை தொடக்கம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய  பிரதமர்,  “இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது; இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கா னோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றும், தூத்துக்குடியை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்ற, அளித்த உறுதிமொழி நிறைவேற்றப் பட்டுள்ளது; இந்திய வரைபடத்தின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டு இன்றைய நிகழ்வு; தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள், கனவுகளை இன்று நனவாக்கியுள்ளோம் என்று கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்.

கசப்பான உண்மையை சொல்கிறேன். முந்திய காங்கிரஸ் ஆட்சியின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்து காங்கிரஸ் ஆட்சியில் காகித வடிவில் இருந்தது. தற்போதுதான் அதை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில் தலைசிறந்து விளங்குகிறோம்; கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது; உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மத்தியஅரசின் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலைவழி இணைப்புகள் மேலும் சிறப்பாக மாற உள்ளதாக கூறியவர், தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் இணைப்பு அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே உள்ள நல்ல உறவு மேலும் உயர்ந்துள்ளது என்று கூறியவர், ஹைட்ரஜன் படகு காசியின் கங்கை ஆற்றில் தனது பயணத்தை தொடங்கி உள்ளதாகவும், என்னுடைய தொகுதியான காசிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளிக்கும் நன்கொடை இதுவென தெரிவித்தார்.

நாட்டின் சுற்றுலா வளர்ச்சிளை மேம்படுத்துவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றவர், மத்தியஅரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் மறைக்கப்படுகின்றன என குற்றம் சாட்டினார்.

மத்தியஅரசின் திட்டங்கள்  குறித்த அறிவிப்புகள் தமிழ்நாட்டின் செய்தித்தாள்களில்கூட வெளிவர  திமுக அரசு விடுவதில்லை என்றும், வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டை செய்தியாக வெளியிட திமுக அரசு விடுவதில்லை என்றும் சாடினார்.

தூத்துக்குடியில் அரசு விழாவை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரில் திருநெல்வேலி புறப்படுகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.