சென்னை: சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன்” விசிக தலைவர் திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்து உள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியை பெற முயற்சித்து வரும் நிலையில், நான், என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன், சந்தேகமே வேண்டாம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொகுதி மாறுகிறார் என்று கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிதம்பரம் தொகுதி இது என்னுடைய சொந்த தொகுதி, இந்த தொகுதியில் போட்டியிடவே எனக்கு ஆர்வம். இந்த தொகுதியில் ஏற்கனவே 5 முறை போட்டியிட்டு இருக்கிறேன். 2 முறை வெற்றி பெற்று இருக்கிறேன். யார் ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும், வெற்றி பெற செய்தாலும், வெற்றி பெறும் வாய்ப்பை மறுத்தாலும் இந்த தொகுதியை நான் நேசிக்கிறேன் என கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, தற்போதும், தனது தொகுதியை உறுதி சய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி., கள்ளக்குறிச்சி தொகுதியைப் பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் விசிகவில் இணைந்து, கட்சியின் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரபல தொழிலதிபர் ஆதவ் அர்ஜூன் தி.மு.க., கூட்டணி வேட்பாளராக கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்தப்படுவார் என பரபரப்பாக பேசப்படுகிறது. அவர் வி.சி., கட்சி வேட்பாளராக இருந்த போதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்ற தகவலும் வெளியாகிறது. இது கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள தி.மு.க., தொண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில்தான் விசிக தலைவர், தான் சிதம்பரம் தொகுதியில்தான் போட்டியிடுவேன் என்று உறுதிப்பட தெரிவித்து உள்ளார். மேலும், இந்த முறை உதயசூரியன் சின்னத்திற்கு பதிலாக தனது கட்சி சின்னமான பானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டபோது கள்ளக்குறிச்சி தொகுதி உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஆதிசங்கர், 2014ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் காமராஜ், 2019ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் கவுதம சிகாமணி வெற்றி பெற்றனர். தொகுதி உருவானதிலிருந்து நடந்த 3 தேர்தல்களில் 2ல் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற ஆதிசங்கர் மற்றும் கவுதம சிகாமணி ஆகிய இருவருமே தொகுதிக்கு அப்பாற்பட்டவர்கள் ஆவார். இது அப்போதே தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது. அவர்கள் நினைத்தது போலவே கவுதம சிகாமணி எதிர்பார்த்த அளவுக்கு தொகுதியில் மக்களை சந்திக்கவில்லை என்று குறை இன்றளவும் உள்ளது. குறைந்தபட்சம் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நன்றி தெரிவிக்க கூட அவர் வரவில்லை என்பது தொண்டர்களின் ஆதங்கமாக பேசப்படுகிறது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி தொகுதியை கூட்டணிக்கு தாரைவார்க்காமல் தி.மு.க., நேரடியாக போட்டியிட வேண்டும். அதிலும் தொகுதியை சேர்ந்தவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொண்டர்களிடையே வலுத்து வருகிறது.
இந்த நிலையில், போட்டியை சமாளிக்க திமுக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியை விசிகவுக்கோ, காங்கிரசுக்கோ ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.