சென்னை: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார்.
கடந்த 2029 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் இடம் பெற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர், இந்த முறை (2024) பாஜக கூட்டணியில் இணைந்து பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.
தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் ல் வெளியிடப்படும் என தெரிகிறது. நாடே நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திரும் வேளையில், மத்தியில் ஆட்சியை தொடர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன. அதுபோல, எந்தெந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் திமுக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மற்றொரு புறம் அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வருகிறது. பாஜக பாமக, தேமுதிக , தமாக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.