சென்னை: தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்த வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம். தீர்ப்பளிக்கிறது. இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் இருந்து பெரியசாமி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை ஐகோர்ட் மீண்டும் விசாரணை நடத்தி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023 மார்ச் மாதம் (திமுக ஆட்சியில்) உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இதேபோல 2001- 2006 ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்,
இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது பச்சோந்தி போல ஆட்சியாளர்களுக்கு தகுந்தவாறு செயல்படுகின்றனர். ஒவ்வொரு வழக்கிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்தார். கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை தான் விசாரணைக்கு எடுக்கவில்லை, என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தை முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், அவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பல்வேறு தடங்கல்களை தாண்டி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், அமைச்சர் பெரியாசாமி மீதான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (26ந்தேதி) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குகிறது.