வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணமெடுப்பது, வைப்புநிதி கணக்கு எண்ணை மாற்றுவது மற்றும் இறுதி நிலுவைத் தொகையை முழுவதுமாக கோருவது என மூன்று வகையான விண்ணப்பங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் (EPFO) பெறப்படுகிறது.
EPF இறுதி நிலுவைத் தொகைக்கான விண்ணப்பங்களின் நிராகரிப்பு விகிதங்கள் 2017-18 இல் சுமார் 13 சதவீதத்தில் இருந்து 2022-23 இல் கிட்டத்தட்ட 34 சதவீதமாக உயர்ந்துள்ளது,
இறுதி நிலுவைத் தொகை விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் இறுதி PF தீர்வுக்காக பெறப்பட்ட மொத்த 73.87 லட்சம் கோரிக்கைகளில், 33.8 சதவீதம் (24.93 லட்சம்) நிராகரிக்கப்பட்டது, அதே நேரத்தில் 46.66 லட்சம் விண்ணப்பங்கள் தீர்வு காணப்பட்டது மற்றும் 2.18 லட்சம் இறுதி நிலுவைத் தொகையாக உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது 2017-18 மற்றும் 2018-19 இல் காணப்பட்ட நிராகரிப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளது, இது முறையே 13 சதவீதம் மற்றும் 18.2 சதவீதமாக இருந்தது.
இந்த நிராகரிப்பு விகிதம் 2019-20ல் 24.1 சதவீதமாகவும், 2020-21ல் 30.8 சதவீதமாகவும் உயர்ந்ததாகவும் 2021-22ல் நிராகரிப்பு விகிதம் 35.2 சதவீதமாக அதிகரித்துள்ளதும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி விண்ணப்பங்கள் அவர்களின் நிறுவனங்களில் சரிபார்க்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது டிஜிட்டல் இந்தியாவில் அனைத்து கோரிக்கைகளும் தொழிலாளர்களால் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதில் இறுதி நிலுவைத் தொகை உள்ளிட்ட சேவைகள் ஆதார் எண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதாவது ஓர் எழுத்துப் பிழை இருந்தாலும் இவை கணினியால் நிராகரிக்கப்படுகிறது.
இந்த சிக்கல் குறித்து வருங்கால வைப்பு நிதி நிறுவன அறங்காவலர் குழுவுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் கணினி மென்பொருளை மேம்படுத்தவோ அல்லது இதற்கு மாற்று வழிகுறித்தோ எந்த ஒரு விவாதமும் நடத்தவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கான புதிய பயனாளிகளுடன் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்ட EPFO நிறுவனத்தின் இதுபோன்ற அலட்சியப்போக்கால் இறுதி நிலுவைத் தொகை கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு இறந்து போகும் ஓய்வூதியர்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.