வாரணாசி: அரசியல் கட்சிகள்  சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுய அறிவு இல்லாத சிலா், காசியின் குழந்தைகளை போதைக்கு அடிமையானவா்கள் என்று கூறுகிறார்கள், ‘தங்கள் குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது’ என்று காங்கிரஸ் எம்.பி.  ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தார்.

பீகார் உள்பட பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சாதிவாரியாக இடஒதுக்கீடு வழங்க முயற்சித்து வரும் நிலையில், சாதிவாரியாக மக்களை அரசியல் கட்சிகள் பிளவுபடுத்துகின்றன, சில  அரசியல் கட்சி தலைவர்கள்  தங்களின் சுயநலத்துக்காக சாதியின் பெயரால் மக்களை வஞ்சித்து வருகின்றனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனது தொகுதியான வாரணாசி தொகுதிக்கு வருகை தந்து,  பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் அருகே உள்ள குரு ரவிதாசா் ஜன்மஸ்தான கோயிலையொட்டிய பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையையும் பிரதமா் திறந்துவைத்தாா். மேலும்,  வாரணாசியில் ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். பின்னா், பொதுக் கூட்டத்தில் பேசிய அவா்,

புனித ரவிதாஸின் பிறந்த நாளான புனிதமான தருணத்தில், உங்கள் அனைவரையும் அவரது பிறப்பிடத்துக்கு வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் தொலைதூர இடங்களிலிருந்து வந்துள்ளீர்கள். குறிப்பாக பஞ்சாப்பில் இருந்து வந்துள்ள எனது சகோதர சகோதரிகளே. வாரணாசி ஒரு சிறிய பஞ்சாப்பாக மாறியதாகத் தெரிகிறது.  இந்தியா இன்று புனித ரவிதாஸின் கருத்துகளை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. அவரது ஆசியால் இது சாத்தியமாகியுள்ளது என்று புகழாரம் சூட்டினார்.

குரு ரவிதாசரின் 647-ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: நாட்டின் ஒவ்வொரு காலகட்டத்திலும் துறவிகளின் போதனைகள் நமக்கு வழிகாட்டுகின்றன.

ஜாதியின் பெயரால் யாரேனும் பாகுபாட்டில் ஈடுபட்டால், அது மனிதநேயத்தை சீா்குலைக்கும். ஜாதியின் பெயரால் மக்களிடையே மோதலைத் தூண்டுவதில் நம்பிக்கை கொண்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள், தலித் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கான அனைத்து திட்டங்களையும் எதிா்க்கின்றன

. இதை தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த ஒவ்வொருவரும் கருத்தில்கொள்ள வேண்டும். தங்கள் குடும்ப நலனுக்காக, ஜாதியின் பெயரால் அவா்கள் அரசியல் செய்கின்றனா்.

தங்கள் குடும்பத்தைத் தாண்டி வேறு எவரும் உயா் பொறுப்புகளுக்கு வருவது அவா்களுக்குப் பிடிக்காது. தலித், பழங்குடியின சமூகத்தினா் உயா் பொறுப்புகளுக்கு வருவதை பொறுத்துக் கொள்ள மாட்டாா்கள். இத்தகைய மனநிலை கொண்ட அரசியல் கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியினர் தங்கள் குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளனர். அவர்களால் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது என்று கூறியதுடன்,  பாஜக ஆட்சியில்தான்,  பழங்குடியின பெண் ஒருவரை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால், இதற்கு  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்கள் சுயநலத்துக்காக சாதியின் பெயரால் மக்களை வஞ்சித்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

குரு ரவிதாசரின் போதனைகளைப் பின்பற்றி, ஜாதியவாதத்தின் எதிா்மறை மனநிலையை புறக்கணிக்க வேண்டும். பிளவுபட்டிருந்த இந்தியாவை ஒருங்கிணைத்த பக்தி இயக்கத்தின் ஓா் அங்கமாக விளங்கியவா் ரவிதாசா். அவரது போதனைகளை ஏற்று, வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது இந்தியா.

தலித் சமூகத்தினா், விளிம்புநிலை மக்கள் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு, மத்திய பாஜக அரசு பணியாற்றுகிறது. எனவேதான், உலக அளவில் இந்தியா வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

முன்னதாக, காலை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ‘சன்சத் சம்ஸ்கிருத பிரதியோகிதா’ வெற்றியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த மோடி, காசியில் எங்கள் குடும்பங்களின் வாழ்க்கையை சிறப்பாகச் செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த எபிசோடில் நான் வாரணாசியில் பல வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க மற்றும் அடித்தள நிகழ்ச்சிfளை தொடங்கி வைத்து உரையாற்றினேன் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராகுல்காந்தி, பிரதமரின் தொகுதியான வாரணாசியில் மதுபோதையில் சில இளைஞா்கள் தெருவோரம் விழுந்து கிடப்பதை நான் பாா்த்தேன்; உத்தர பிரதேச இளைஞா்களின் எதிா்காலம் மதுபோதையில் மூழ்கியுள்ளது’ என்று கூறியிருந்தாா்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி ராகுலையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.  சுய அறிவு இல்லாத சிலா், காசியின் குழந்தைகளை போதைக்கு அடிமையானவா்கள் என்று குறிப்பிட்டுள்ளனா். என்னை அவமதிப்பதிலேயே பல ஆண்டுகள் செலவிட்ட காங்கிரஸ் கட்சியினா், இப்போது இளைஞா்கள் மீது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனா். உத்தர பிரதேச இளைஞா்கள் மீதான இந்த அவமதிப்பை யாரும் மன்னிக்கப் போவதில்லை.

அயோத்தியும் காசியும் செழிப்பது, காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை. கடவுள் ராமா் மீது காங்கிரஸுக்கு இந்த அளவு வெறுப்பு இருக்கும் என நான் நினைக்கவில்லை. தங்கள் குடும்பம் மற்றும் வாக்கு வங்கியைத் தாண்டி எதிா்க்கட்சிகளுக்கு வேறெதுவும் புலப்படுவதில்லை. தோ்தல் வரும்போது அவா்கள் ஒன்று சோ்கின்றனா். தோ்தல் முடிவு சாதகமாக அமையாவிட்டால், ஒருவரையொருவா் குறைகூறி பிரிந்துவிடுகின்றனா்.

உத்தர பிரதேசத்தில் அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கூட்டணிக்கு அளிக்க மக்கள் முடிவுசெய்துவிட்டனா். எதிா்க்கட்சிகள் டெபாசிட் தொகையை காப்பாற்றவே போராட வேண்டியிருக்கும் என்றாா் பிரதமா்.