நாம இதைச்சொல்லி, யார் படிக்கப்போறா?
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
இன்றைக்கு இலவச கல்வியின் அவசியம் பற்றி மூலைக்கு மூலை கூவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காலத்திலேயே 14 வயது வரை இலவசமாய் கல்வியை கட்டாயம் கொடுக்கவேண்டும் என்று குரல் கொடுத்து பேரராடியவர், அபுல் கலாம் ஆசாத்.
நாட்டுக்கு சுதந்திரம் கேட்ட முன் களப்போராளிகளில், முக்கியமானவர் அவர். இந்தியர்கள் போராடிய வேளையில் பிரிட்டிஷ் ஆட்சி இந்து-முஸ்லீம் இடையே பிளவை உண்டாக்கி அருமையாக குளிர்காய்ந்து கொண்டிருந்தது. இந்த பிரித்தாளும் சூழ்ச்சியின் ஆணிவேரை வெட்டுவதற்காகவே, ஹல் ஹிலால் என ஒரு உருது வார இதழை தொடங்கி பிரிட்டிஷ்காரர்களை வெளுத்தார்.
உடனே மேற்கு வங்கத்தை விட்டு விரட்டியடித்தது அரசு. இரண்டே ஆண்டில் பத்திரிக்கைகு தடை.. இருந்தாலும் ஆசாத் விடவில்லை. போடாங் ங்கொய்யால என்று மறுபடியும் ஹல் பலாஹி என வேறு பெயரில் பத்திரிகையை கொண்டுவந்தார். அதே ஆவேசமான எழுத்துகள். “அடேய் நீ அடங்கவே மாட்டீயா?” என அந்த பத்திரிகையையும் இரண்டே ஆண்டுகளில் முடக்கியது பிரிட்டிஷ் ஆட்சி..
பல மாநிலங்களிலிருந்து ஆசாத்தை விரட்டியடித்தபடியே இருந்தது. அப்புறமென்ன? ஆசாத்துக்கு மாறுவேட போட்டிதான். இப்படித்தான் உருவெடுத்து சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக திகழ்ந்தார் ஆசாத்.
வெறும், 35 வயதிலேயே காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகிறார் என்றால் அவரிடம் எந்த அளவுக்கு திறமைகள் குவிந்திருக்கவேண்டும்! ஆசாத்துக்கு அடுத்துதான் மகாத்மா காந்தியே 1924-ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்தார். ஒரு புறம், முகமது அலி ஜின்னா போன்றவர்களால் வலுப்பெற்று வந்த நாட்டின் பிரிவினை வாதம்… இன்னொருபுறம் பிரிட்டிஷ் காரர்களை எதிர்த்து பல போராட்டங்களுடன் சுதந்திரத்தை நோக்கி நாடு முன்னேறிவந்த தருணம்.. இந்தியத் துணைக்கண்டம் பல பிரச்சினைகளை உக்கிரமாக சந்தித்து கொண்டிருந்த அசாதாரணமான காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக 1940 முதல் ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய அற்புதமான தலைவன் ஆசாத்.
பாகிஸ்தான் பிரிவினை தீர்மானத்தை ஆதரித்து வாக்க ளிக்காததால் ‘’காங்கிரசின் கைப்புள்ளை’’ என முகமது அலி ஜின்னாவால், கேலி பேசப்பட்டவர் ஆசாத். காந்தி, நேரு, படேல், நேதாஜி போன்றோர் வரிசையில் இடம் பெற்றிருந்த ஆசாத், நாடு சுதந்திரம் பெற்றதும் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றார். சிறந்த படிப்பாளியான ஆசாத், பிரிட்டிஷார் காலிசெய்துவிட்டு போன வெற்று இந்தியா, உயர்கல்வியில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த தொலைநோக்கு சிந்தனையுடன்தான் உயர்கல்வி நிறுவனங்களை அவர் உருவாக்கினார்.
தொழில் நுட்ப கல்வியின் அவசியத்தை உணர்ந்து 1951ல், முதல் ஐஐடியை கேரக்பூரில் பிறக்க வைத்தார் . அதன் பின் வரிசையாக மும்பை கான்பூர் சென்னை, டெல்லி போன்ற இடங்களில் ஐஐடிக்களை அமைத்தார் ஆசாத்.
இன்னொரு பக்கம், பல்கலைக்கழக மானியக்குழுவையும் உருவாக்கினார். கல்வியில் இத்தனை சாதனைகளை படைத்ததனால்தான் ஆசாத் பிறந்த நாள், இந்தியாவின் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுது.
1958ல் மறைந்த, பாரத ரத்னா அபுல்கலாம் ஆசாத்தின் 66 வது நினைவுதினம் இன்று.
இதையே யாரும் படிக்க போறது இல்ல. இதுக்கு மேல விலாவாரியா சொன்னா யார் படிப்பா?