ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு எதிராகவும் கிரெம்ளின் மாளிகையில் நடைபெறும் ஊழலுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறையில் அடைக்கப்பட்டவர் நவல்னி.
இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட நவல்னி உடல்நிலை சரியில்லாமல் சுயநினைவை இழந்ததாக மத்திய சிறைச்சாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் மரணடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 47 வயதான நவல்னி, டிசம்பரில் மத்திய ரஷ்யாவின் விளாடிமிர் பகுதியில் உள்ள சிறையிலிருந்து ரஷ்யாவின் மிகவும் பாதுகாப்பான வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டார்.
மாஸ்கோவிற்கு வடகிழக்கே சுமார் 1,900 கிலோமீட்டர் (1,200 மைல்கள்) தொலைவில் உள்ள யமலோ-நெனெட்ஸ் பகுதியில் உள்ள கார்ப் நகரத்தில் உள்ள ஒரு காலனியில் உள்ள சிறைக்கு நவல்னி மாற்றப்படுவதை அவரது ஆதரவாளர்கள் எதிர்த்துவந்தனர்.
இந்த நிலையில் அரசியல் கைதியாக சிறைவைக்கப்பட்ட ரஷ்யா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் நவல்னி மரணடைந்ததாக சிறைத்துறை அறிவித்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.