சென்னை:  அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுத்துள்ளது. அரசுக்கும் அரசு ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுட்ததுஇ, அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். வரும் 15ந்தேதி (நாளை) அடையாள வேலைநிறுத்தம் செய்வதாகவும், பிப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

இதையடுத்து,  பேச்சுவார்த்தைக்கு வரும்படி அரசு அழைப்பு விடுத்தது. இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் அலுவலகத்தில், அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் எ.வ. வேலு, முத்துசாமி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பேச்சுவார்த்தையில் இடம்பிடித்த அம்சங்களை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அதுவரை காத்திருக்கும்படியும் அரசு தரப்பில் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்த குமார். முதலமைச்சரின் முடிவுக்கு காத்திருப்பதாகவும் அவர், நிச்சயமாக தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என எதிர்பார்ப்பதாகவும்  தெரிவித்தார்..

ஆனால்,  இதுவரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து  எந்தவொரு  அறிவிப்பும் வராத நிலையில், போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 15ம் தேதி அன்று அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் 15-ந் தேதி அடையாள வேலைநிறுத்தம் அறிவிப்பு…