பிரதமர் நரேந்திர மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதனால் அவர் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து திங்களன்று மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டியதோடு, தான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் தன்னை ‘மிகப்பெரிய ஓபிசி’ என்று வர்ணித்தார்.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி தனது ஜாதி குறித்து பொய் சொல்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “பிரதமர் பொது வகுப்பைச் சேர்ந்தவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல” என்றும் கூறிய ராகுல் காந்தி “மோடி எப்போதும் பொய்களையே சொல்லி வருகிறார்” என்று கூறினார்.
“குஜராத்தில் தெலி இனத்தில் பிறந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. 2000 ஆம் ஆண்டு பாஜகவால் இந்த சமூகத்திற்கு ஓபிசி அங்கீகாரம் வழங்கப்பட்டது. அவர் ஒரு பொது ஜாதியில் பிறந்தவர். அவர் ஓபிசியில் பிறக்கவில்லை, பொது ஜாதியில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டார்” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.