திண்டிவனம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் அரசியல் பேரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சிவி. சண்முகம் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போதுள்ள 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அகில இந்திய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன. அதுபோல, எந்தெந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக என மூம்முனை போட்டி நிலவி வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ஆனால், அதிமுக, பாஜக கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளுக்கு வலைவீசி வருகிறது. மேலும், பாமக, தேமுதிகவை தங்களது கூட்டணியில் இணைக்க இரு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை, அவரது திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். அப்போது, இருவரும் அதிமுக பாமக கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால், பாமக சார்பில் அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா தொகுதி உள்பட 8 தொகுதிகளை கேட்டுள்ள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.