டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தற்போதுள்ள 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அகில இந்திய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன. அதுபோல, எந்தெந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு பணிகளும் நடைபெற்று வதுகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ராகுல்காந்தி, மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் ஆளும் கம்யூனிஸ்டு உள்பட பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது வயநாடு தொகுதியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி, வயநாடு மட்டுமின்றி உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில், அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்தார். ஆனால், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். இந்த நிலையில், தற்போது, ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மட்டுமே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.