டெல்லி: தனி நாடு தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின்தம்.பி. டி.கே.சுரேஷ் எம்.பி.க்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பிப்ரவரி 1ந்தேதி மத்திய இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புறநகர் எம்பி-யும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ், “ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி விதிப்பில் தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய பங்கை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை. தென் இந்திய மாநிலங்கள் தொடர்ந்து அநீதியை எதிர்கொண்டு வருகின்றன. தென் இந்திய மாநிலங்கள் மூலம் பெறப்படும் வரி வருவாய் வட இந்திய மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரிக்கைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். மத்திய அரசு எங்களிடம் இருந்து ரூ.4 கோடியை பெறுகிறது. ஆனால், சொற்பத் தொகையையே எங்களுக்கு வழங்குகிறது. இது குறித்து நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதற்கு தீர்வு காணப்படாவிட்டால், அனைத்து தென் இந்திய மாநிலங்களும் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “தென் இந்தியாவின் வலி குறித்தே அவர் பேசி உள்ளார். ஒட்டுமொத்த நாடும் ஒன்றுதான். இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் தர முடியாது. பட்ஜெட்டில் சமமாக நிதிப் பங்கீடு நடைபெற வில்லை. கர்நாடகா மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாயை வழங்கி வருகிறது. ஆனால், தென் இந்தியாவுக்கு எந்த பெரிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் பின்தங்குவதாக உணர்கிறோம். அதேநேரத்தில், நாடு முழுவதும் ஒன்றுதான். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும். பிராந்திய வாரி கோரிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை” என தெரிவித்துள்ளார்.
டி.கே. சுரேஷின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, “பிரித்தாளும் வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. தற்போது அக்கட்சியின் எம்.பி., வடக்கு – தெற்கை பிரிக்க வேண்டும் என்கிறார். சமீப ஆண்டுகளில் கர்நாடகாவுக்கான வரிப் பங்கீட்டைப் பொறுத்தவரை அதிரித்தே வருகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இரண்டின் ஆட்சிக்காலமான 2009-14ல் மத்திய அரசு கர்நாடகாவுக்கு வழங்கிய நிதி ரூ. 53,396 கோடி. அதேநேரத்தில், பிரதமர் மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சிக் காலமான 2014-19ல் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட நிதி ரூ. 1.35 லட்சம் கோடி.
ஒருபக்கம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், யாத்திரை செல்கிறார். மற்றொரு பக்கம், அதே கட்சியைச் சேர்ந்த, நாட்டை பிரிக்க நினைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாம் பெற்றிருக்கிறோம். நாடு துண்டாடப்படுவதை கர்நாடக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இதற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உரிய பதிலடிமை மக்கள் கொடுப்பார்கள். காங்கிரஸ் இல்லா பாரதத்தை மக்கள் உறுதிப்படுத்துவார்கள்” என தெரிவித்துள்ளார்.
“இது தேர்தல் பட்ஜெட். இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு, தென் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளில் சரியான முறையில் பங்கை வழங்குவதில்லை. தென் மாநிலங்கள் அநீதியை சந்தித்து வருகின்றன. தென் மாநிலங்களில் இருந்து பணத்தை வசூலித்து வட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளப்படுவோம். 4 லட்சம் கோடிக்கு மேல் எங்களிடம் இருந்து மத்திய அரசு பெறுகிறது. ஆனால், அதற்கு ஈடாக நாம் பெறுவது மிகவும் சொற்பம் தான். இதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இதை சரி செய்யாவிட்டால் அனைத்து தென் மாநிலங்களும் தனி நாடு கோரி குரல் எழுப்ப வேண்டும்” என்று கூறினார்.
தனி நாடு கோரும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று இவர் கூறியது தற்போது விவாதப் பொருளாக மாறியதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ரவிசங்கரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், “தனி நாடு கோரி சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவரது பதவியை அவமானப்படுத்துவதாகும். இந்த விவகாரத்தை நெறிமுறைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். காங்கிரஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதனையடுத்து டிகே சுரேஷ் பேச்சை கண்டித்த, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டைப் பிரிப்பது குறித்து யாராவது பேசினால் அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அவருக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.