கருணாகரன்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோ.பாலன் (40), கோட்டக் மகிந்திரா என்ற தனியார் நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடன் வாங்கினார்.
கடைசி 2 தவணை செலுத்து வதில் தாமதம் ஏற்பட்டதால், நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல் தலைமையில் சென்ற காவலர்கள்  பாலனை அடித்து, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றார்கள்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டுள்ள நிலையில், மத்திய மண்டல காவல் துறை ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில், இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய போலீஸாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பாப்பாநாடு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் ராஜா, குமரவேல், முதல் நிலைக் காவலர் ஏசுராஜ் ஆகிய 3 பேரை தஞ்சாவூர் ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றி, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகணன் உத்தரவிட்டார்.
மேலும், இதில் தொடர்புடைய ஆய்வாளர் குமரவேலுவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, பாலன் தாக்கப்படும் வீடியோ பதிவைப் பார்த்த, சூது கவ்வும், ஜிகர்தண்டா திரைப்பட நடிகரான கருணாகரன் அவரது மனைவி தென்றல் ஆகியோர், விவசாயி பாலனை தொடர்புகொண்டு, தங்களின் வேதனையை தெரிவித்து ஆறுதல் கூறினர். அதோடு அவருக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து, பாலனின் வங்கிக் கணக்குக்கு ரூ.1 லட்சத்தை நேற்று அனுப்பியுள்ளனர்.