திருப்பூர்: பல்லடம் அருகே, தனியார் (நியூஸ்7) தொலைக்காட்சி நிருபர் நேசபிரபுவை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொடூர செயலுக்கு ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் தவிர மற்ற தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. தி.மு.க. ஆட்சியில், ரவுடிகளின் அராஜகமும், தி.மு.க.வினரின் அத்துமீறலும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றன. தமிழக காவல் துறை ஏவல்துறையாக மாறி உள்ளதாகவும், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளன.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் நேசபிரபு அவர்களை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விஷயத்தில் காவல்துறையிடம் புகார் கூறியும் முறையான பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில், செய்தியாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேச பிரபு. இவர் கடந்த சில ஆண்டுகளாக நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர்கள் இவரது வீட்டையும் நேச பிரபுவின் நடமாட்டத்தையும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை முதலே வெளி ஆட்களின் நடமாட்டம் அதிகரித்ததால் சந்தேகம் அடைந்த நேச பிரபு இரவு காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய போலீசாரையும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொண்டு தன்னை நோட்டமிட்டு வரும் நபர்களால் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை பைக் மற்றும் கார்களில் ஒரு தரப்பு தொடர்ந்து வருவதாகவும், அவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் காவலர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அவ்வாறு நேச பிரபு பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென ஒரு கும்பல் தன்னை நெருங்கி விட்டதாகவும், தன்னைத் தாக்க துவங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது எதிர்காலமே முடிந்தது எனக் கூறி கடைசியாக பேசிய ஆடியோவுடன் கே கிருஷ்ணாபுரம் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் புகுந்துள்ளார். அப்போது, அலறல் சத்தமும் அந்த ஆடியோவில் கேட்கிறது.
இருப்பினும் விரட்டிச் சென்றபோது மர்ம கும்பல் நேச பிரபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த நேச பிரபுவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டு வர, மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் அங்கிருந்தவர்கள் நேச பிரபுவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு நேச பிரபுவை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இச்சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணையை துவக்கியுள்ளனர். மேலும் இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சூழலில், நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைத்து திருப்பூர் மாவட்ட எஸ்பி சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொடூர செயலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும். பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நேசபிரபு, விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தமிழகத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் தினசரி வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையின் கைகள் திமுக அரசால் முற்றிலுமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால், ஆட்சியின் தவறுகளையோ, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையோ, ஊடகங்கள் கேள்வி எழுப்பாமல், கேள்வி கேட்பவர்களையும் மௌனமாக்கவே முயல்கிறார்கள்.
அதிகாரத்தைக் கேள்வி கேட்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, மூத்த ஊடகவியலாளர்கள் விரும்புவதில்லை. நேர்மையான சில ஊடகவியலாளர்களும் சமூக விரோதிகளால் இது போன்ற தாக்குதலுக்கு உள்ளாவதால், அதிகாரத்துடன் அனுசரித்துச் செல்லவே அனைவரும் மறைமுகமாக கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைப்பவர்களும், அதனை மக்களுக்காகப் பயன்படுத்துவதில்லை.
திமுக அரசில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வியடைந்துள்ளது. ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். திமுக அரசின் தோல்விகளை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைத்து, மயிலிறகால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. இது தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குறித்த பிரச்சினை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில், ரவுடிகளின் அராஜகமும், தி.மு.க.வினரின் அத்துமீறலும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு. நேசப்பிரபு அவர்கள் தன்னை சில மர்ம நபர்கள் கண்காணிப்பதாக நேற்று காவல் நிலையத்திற்கு புகார் அளித்து அதன்மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செய்தியாளர் திரு. நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் புகார் அளித்த உடனேயே காவல் துறை துரிதமாக செயல்பட்டிருந்தால், இந்தக் கொலை வெறித்தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இதைச் செய்ய காவல் துறை தவறிவிட்டது. காவல் துறையினரின் மெத்தனப் போக்கே இந்தக் கொலைவெறித் தாக்குதலுக்கு காரணமாகிவிட்டது. இந்தக் கொலை வெறித் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒருபுறம் என்றால், மறுபுறம் தி.மு.க.வினரால் நடத்தப்படும் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று அரசு சார்பில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் மாணவ, மாணவியருக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. இதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பஞ்சாயத்து, கம்மியம்பட்டு புதூரில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அங்கன்வாடி மையம் அமைந்துள்ள இடம் தங்கள் உறவினருக்கு சொந்தமானது என்றுகூறி அங்குள்ள குழந்தைகளை வெளியேற்றி அந்த மையத்தையே தி.மு.க. கிளைச் செயலாளர் பூட்டி வைத்த சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. மொத்தத்தில், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர்மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளவர்களை உடனடியாக கண்டுபிடித்து, கைது செய்து, உரிய விசாரணை நடத்தி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும்; செய்தியாளருக்கு உயர்தர மருத்துவச் சிகிக்சை மற்றும் நிவாரணம் வழங்கவும்; புகார் பெறப்பட்டும் உடனடி நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காகவே திரு.நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாக பலமுறை புகார் அளித்த பின்னரும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பெட்ரோல் பங்கில் வைத்து நேசபிரபு மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
திமுக ஆட்சிக்குவந்த பின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை போன்ற சட்டம், ஒழுங்கு பிரச்னைகளால், பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பில்லாத சூழலில் பணியாற்றி வருவதற்கு தற்போது நடந்திருக்கும் தாக்குதல் சம்பவம் கூடுதல் சாட்சியாக அமைந்திருக்கிறது.
எனவே, உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனிமேலாவது சட்டம், ஒழுங்கு பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி, இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.நேசபிரபு அவர்களுக்கு அரசு சார்பில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், நியூஸ் 7 தமிழ்த் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த நேசபிரபு என்பவர் நேற்றிரவு அவரது வீட்டுக்கு அருகில் சமூகவிரோதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களை நேசபிரபு செய்தியாக்கி வந்திருக்கிறார். அது தான் அவர் மீதான தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்த பிறகும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம் ஆகும். நேசபிரபு மீது தாக்குதல் நடத்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு, இவர் அந்தப் பகுதியில் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சமூக விரோதிகளால் நேற்று (24.01.2024) இரவு கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செய்தியாளர் கோவை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேர்காணல் நடத்திய நியூஸ் 18 கார்த்திகை செல்வன் குறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். கருத்துக்களையும், நிகழ்வுகளையும் வெளியிடும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. செய்தியாளர்கள் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நியூஸ் 7 தொலைக்காட்சியின் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு இன்று மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன். தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என அவர் முன்கூட்டியே காவல்துறைக்குத் தகவல் அளித்தும் காவல்துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்காதது கண்டனத்திற்குரியது. நேசபிரபு ஒரு துடிப்பான செய்தியாளராகப் பணியாற்றியவர். அவரை கொலைவெறியுடன் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்று கோருகிறேன். செய்தியாளர் நேசபிரபுவிற்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய பல்லடம் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறியுள்ளதாவது:- மக்கள் பிரச்னைகளை, அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை துணிவுடன் களத்தில் நின்று எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது;
நியூஸ்7 தமிழின் பல்லடம் செய்தியாளர் நேச பிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும்; முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்நேச பிரபு மருத்துவ செலவுகள் முழுமையையும் அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.