சென்னை: நேதாஜி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் நிகழ்ச்சி, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்களுக்கு அட்டண்டன்ஸ் கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதை சில கட்சிகள் அரசியலாக்கி, சர்ச்சையை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், துணைவேந்தர் வேல்ராஜ், தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை என கூறினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் ( (ஜன.23) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், , தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அதேசமயம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், இந்தியத் தேசிய ராணுவத்தின் முன்னாள் வீரர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், அங்கு படிக்கும் பொறியியல் பிரிவு மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும், மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்யவேண்டும் என அதன் முதல்வர் சுகந்தி துறைத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதை சிலர் அரசியலாக்கி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், “அண்ணா பல்கலைக் கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் வந்திருந்தனர். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் 400 பேர் மாணவர்கள் கலந்து கொண்டனர். 2 மணி நேரம் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுப் பங்கேற்றனர். நாட்டுப்பற்று பெற வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் பங்கேற்க வைக்கப்பட்டனர். தேசப்பற்று நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டதில் எந்த தவறும் இல்லை. வருகை பதிவேடு என்று சொன்னால் மட்டுமே மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். இல்லையென்றால் மாணவர்கள் வகுப்புகளுக்கும் செல்லாமல், வெளியில் சென்று விடுவார்கள் என்ற அடிப்படையில் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் வருகைப் பதிவு என்று கூறப்பட்டது. தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் தவறு இல்லை” என தெரிவித்தார்.