சென்னை: ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறிய நிலையில், தற்போது அமைச்சர் சேகர்பாபுவும் தெரிவித்து உள்ளார்.
ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு 90 நாட்கள் முன்னதாக நடைபெற்றுள்ளதால், பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க முடியும், அரசு அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அவசர கதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைத்தில் போதிய வசதிகள் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் வேதனை அனுபவித்து வருகின்றனர். அதுபோல ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் பேருந்து நிலைய பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதை அரசு ஏற்க மறுத்து வருகிறது. கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள். கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும் என்று அமைச்சர் மிரட்டி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், திமுக அரசு, நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாக கூறி, அரசுத் துறை செயலர்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சென்னை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி திடீரென திறந்து வைத்தார். பணிகள் முற்றுபெறாமல் பேருந்து நிலையத்தை திடீரென திறந்து வைத்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் பெரும் வேதனை அடைந்தனர். அதுமட்டுமின்றி அந்த பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளையும் ஜன.24-ம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பேருந்துகளை நிறுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் போதிய இடவசதி, பயணிகள் எளிதில் கிளாம்பாக்கத்தை அடையும் வகையில் போக்குவரத்து வசதி போன்றவற்றை செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த 21-ம் தேதி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முடிச்சூர் வரதராஜபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவு பெறாததை மேற்கோள் காட்டி ஆம்னி பேருந்துகளை அடுத்து 3 அல்லது 4 மாதங்களுக்கு கோயம்பேடு வரை பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், அதை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. இதுகுறித்து கூறிய, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ‘‘கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளன. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது. தவிர, விரைவு பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குவது சரியாக இருக்காது. எனவே, 24-ம் தேதி (இன்று) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் சேகர்பாபுவும் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.