சென்னை

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இந்தியாவுக்கு காங்கிரஸால் சுதந்திரம் கிடைக்கவில்லை எனக் கூறி உள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

நேற்று நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் 127-வது பிறந்தநாளையொட்டி, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில்,

”இந்தியச் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களுள் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் முதன்மையானவர். அவர் இன்றைய மாணவர்களுக்கு, சிறந்த முன்மாதிரியாக உள்ளார்.  இன்று நாம் சுதந்திரத்துக்காகப் போராடிய தியாகிகள், வீரர்களையும், அவர்களின் தியாகத்தையும், நம் வரலாற்றையும் நாம் மறக்கத் தொடங்கி உள்ளோம். 

இந்தியாவுக்கு இந்தியத் தேசிய காங்கிரசால்தான் சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணம் அவ்வளவுதான். இந்தியத் தேசிய ராணுவத்தின் புரட்சிதான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான மிக முக்கிய காரணமாக இருந்தது. 

மேலும் அப்போதைய இங்கிலாந்து பிரதமர் இந்தியத் தேசிய காங்கிரசின் போராட்டம் இந்தியா சுதந்திரம் அடைய ஒரு சிறிய காரணமாக இருந்தது எனவும், நேதாஜியின் புரட்சியும், இந்தியத் தேசிய ராணுவத்தின் பலமும்தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்க மிகப்பெரிய காரணமாக இருந்தது எனவும் கூறியுள்ளார். 

ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து  இந்திய வீரர்களை வைத்துப் போரிட்ட நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், 1946-ல் இந்தியப் பெருங்கடலையே முடக்கி, ஆங்கிலேயர்களின் கப்பற் படையை தோற்கடித்ததால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்வதறியாது தவித்தனர். 

தங்கள்க்கு இனி இந்தியாவில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால்தான், 1947-ல் இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது.  நமது சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் நேதாஜி என்றாலும் நாம் அவரைப் பற்றி பெரிதும் பேசுவதில்லை.”

என்று கூறி உள்ளார்.

உலகமே இந்தியச் சுதந்திரம் காங்கிரசால் கிடைத்தது எனச் சொல்லி வரும் வேளையில் தமிழக ஆளுநர் இவ்வாறு பேசியது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நேதாஜி பெரிய வீரர்தான் என்றாலும் அவரை புகழ்வதற்காக காங்கிரஸை குறை கூறியதற்கு அரசியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.