சென்னை: தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் உயர்த்தப்பட வில்லை, ஆனால், கட்டணம் மாற்றி யமைக்கப்பட்டு உள்ளது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட பல ஊர்களுக்கு சென்றவர்களிடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணங்களைவிட கூடுதல் கட்டம் வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. சென்னையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கிளாம்பாக்கம் செல்ல ஒவ்வொருவரும் பல நூறு ரூபாய் கூடுதல் செலவழிக்க வேண்டிய அவலம் இருப்பதுடன், முறையான போக்குவரத்து வசதி செய்யப்படாததால், பயணிகள் லக்கேஜ்களை சுமந்து செல்ல வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநில அரசு மீது பொதுமக்கள் கடுமையாக அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த சர்ச்சைக்கு இடையில், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட விரைவு பேருந்துகள் (எஸ்இடிசி) அனைத்திலும், பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டினர். சென்னை-சேலம் இடையே ரூ.300-ல் இருந்து ரூ.310 ஆகவும், சேலம்-நெல்லை இடையே ரூ.425-ல் இருந்து ரூ.430, நெல்லை-ஓசூர் கட்டணம் ரூ.590-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டம் ரூ.580, ரூ.590 ஆக இருந்த இடங்களுக்கு ரூ.600 ஆகவும் தூரத்தை பொறுத்து ரூ.30 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
சில்லறை பிரச்சினையை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக புகார்கள் கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன், “ஏற்கனவே உள்ள பஸ் கட்டணத்தில் ஒரு சில இடங்களுக்கு சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அந்த வழித்தடத்தில் மட்டும் சிறிய அளவில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்களுக்கு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே உள்ளபடி தான் வசூலிக்கப்படுகிறது. அதில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது” என்றார்.
இந்த நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்து கழகம் உட்பட 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது; இதனால் ஒரே கட்டணமாக வசூலிக்கும் வகையில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென் மாவட்டம் செல்லக்கூடிய பயணிகளுக்கு பயண தூரம் குறைவதால் கட்டணம் குறைக்கப்பட்டதாகவும், சில வழித்தடங்களில் பயண தூரம் வேறுபாடு அடைந்திருப்பதால் பயண கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்படவில்லை எனவும், ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களுக்கும் தனித்தனியான கட்டண இருந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.