மதுரை: தலைமறைவு குற்றவாளிகள் குறித்து நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடாதது ஏன் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மோசடி பதிவு தொடர்பான வழக்கில் காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதார் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரை அயன்பாப்பாகுடி அன்பழகன் நகரில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தை கிரையம் வாங்கி, 1984ல் பத்திரப் பதிவு செய்தேன். இச்சொத்து தொடர்பாக சார் – பதிவாளர் அலுவலகத்தில் 2020ல் வில்லங்கச் சான்று பெற்றேன். அதில் வேறொரு நபர் பெயருக்கு கிரைய ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நான் யாருக்கும் கிரையம் எழுதி கொடுக்கவில்லை. நிலத்தை பார்வையிடச் சென்றேன். ஆக்கிரமித்துள்ள சிலர் மிரட்டினர். என் புகாரின் படி, சிலர் மீது வழக்கு பதிந்தனர்; சரியாக விசாரிக்கவில்லை. விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளத.

இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கு ஆவணங்களை பார்க்கையில் காவல்துறையின் விசாரணை  திருப்திகரமாக இல்லை என்று விமர்சித்ததுடன், வழக்கில் தொடர்புடைய விக்ரம் மேற்கு வங்கத்தில் தலைமறைவாக உள்ளார்; அவரை தேடி வருகிறோம் என போலீஸ் தரப்பு தெரிவித்திருப்பது காவல்துறையின் அஜாராக்கிரதை என்று கூறியதுடன், இதுபோன்று  தலைமறைவு குற்றவாளிகள் குறித்து அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு முறையான பதிலை தெரிவிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் தயங்கி நிலையில்,  குற்றவாளிகள் தொடர்பாக கேரளாவில் அனைத்து நாளிதழ்களிலும் காவல்துறையின் அறிவிப்புகளை தினமும் காண்கிறோம்.  ஆனால், அதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டில் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்ய தமிழக காவல்துறை வெளி மாநிலத்திற்கு செல்லாமல் இருப்பது ஏன்;  இது, குற்றவாளியை பாதுகாப்பது போல் உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.

மேலும்,  இந்த வழக்கில் மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., மற்றும் மதுரை போலீஸ் கமிஷனரை எதிர்மனுதாரரர்களாக இணைத்துக் கொள்ள இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து உத்தரவிடுகிறது.  இதுதொடர்பான அறிக்கையை அரசு வழக்கறிஞர் பிப்., 2ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.