டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் இன்று கூடுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்றுக்குழுவும், காவிரி மேலாண்மை ஆணையமும் அவ்வப்போது கூடி நீர் பங்கீட்டை சுமுகமாகச் செய்து வருகின்றன. ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடி, தமிழகத்துக்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவை வலியுறுத்தியது. அதன்பிறகு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதால் பலவலாக மழை பெய்து வந்தது. இதனால் தண்ணீர் தேவை இல்லாத நிலை இருந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் காவிரி ஒழுங்காற்று கூட்டம் நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜனவரி மாதம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய நீரை திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.