காஞ்சிபுரம்: பிரபலமான வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே பல ஆண்டுகளாக மோதல் உள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், கோயில்களில் மந்திரங்கள் மற்றும் பிரபந்தம் பாடி வழிபாடுநடத்துவது என்பது வழிபாட்டு உரிமை. அதை நீதிமன்றம் தடுக்க முடியாது. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையால் கடந்த 2 ஆண்டுகளாக சுமுகமான வழிபாடு இல்லை. அதேபோல கோயில் வழிபாட்டுத் தலங்களில் தனிநபர்பகை அல்லது எதேச்சதிகாரத்துக்கும் இடம் கிடையாது. மேலும், கோயில் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி கீழ்கண்ட உத்தரவை பிறப்பிக்கிறேன்.
கோயில் நிர்வாக அதிகாரி பூஜை நேரங்களில் முதலில் தென்கலை பிரிவினரை சிலைக்கு முன்பக்கமாக அழைக்க வேண்டும். அவர்களை ஸ்ரீசைலேச தயா பாத்ரத்தின் முதல் 2 வரிகளை மட்டும் பாட அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு வடகலை பிரிவினரை அழைத்து ராமானுஜ தயா பாத்ரத்தில் உள்ள முதல் 2 வரிகளை பாட அனுமதிக்க வேண்டும். அதன்பிறகு தென்கலை மற்றும் வடகலை பிரிவினர் இருவரும் ஒன்றாக இணைந்து பிரபந்தம் பாட வேண்டும். பிரபந்தம் பாடிய பிறகு, இறுதியாக தென்கலையினர் மணவாள மாமுனிகள் வாழித் திருநாமம் பாட வேண்டும்.
அடுத்து, வடகலையினர் தேசிகன் வாழித் திருநாமம் பாடிபூஜையை நிறைவு செய்ய வேண்டும். ஒருவேளை இந்த உத்தரவுப்படி ஒருதரப்பு மறுப்பு தெரிவித்தால் பாட முன்வரும் மற்றொரு தரப்பை செயல் அதிகாரி அனுமதிக்க வேண்டும்.
இந்த உத்தரவை இருதரப்பும் மதித்து நடக்க வேண்டும். மீறி சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கோயில் நிர்வாக அதிகாரி சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸில் சட்டரீதியாக புகார் அளிக்கவேண்டும். போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்டதுடன், வாக்குவாதத்தின் போது திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.