சென்னை: சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம், கட்சியின் கொள்கைக்கு எதிராக பேசியதற்காக விளக்கம் கேட்டு, காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சமீபத்தில் தந்தி ஊடகத்தின் சிறப்பு நேர்காணலில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவசங்ககை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாகவும், உண்மையான தகவல்களையும் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த விவாதத்தின்போது, திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்பட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் குறித்தும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். மேலும், பிரதமர் மோடியின் சில நடவடிக்கைகளை பாராட்டியதுடன், அவருடன் ராகுல் உள்பட யாரையும் ஒப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.
கார்த்தி சிதம்பரத்தின் இந்த பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலானது. பிரதமர் குறித்து அவர் கூறிய கருத்தை, பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு கார்த்தி சிதம்பரத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கார்த்தி சிதம்பரம் நீட் வழக்கு உள்பட பல விவகாரங்களில், தனது கருத்தை வெளிப்படையாக பேசி வருவதுடன், அவ்வப்போது, காங்கிரஸ் தலைமையின் நடவடிக்கைகளையும், கருத்துக்களையும் விமர்சித்து வருகிறார்,. இந்த நிலையில்தான் , பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரான தலைவர் யாரும் நாட்டில் இல்லை என வெளிப்படையாக கூறியிருந்தது, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக்குழு சார்பில், தலைவர் குமாரசாமி விளக்கம் கேட்டு சிவகங்கை எம்.பி. கார்த்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து கூறிய கார்த்தி சிதம்பரம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை என்று என்று கூறியதுடன், எனக்கு எந்தக் கடிதமும் வரவில்லை. அதற்கான அதிகாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு இல்லை” என தெரிவித்துள்ளார்.