சென்னை: வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 50 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும், தேர்தல் மற்றும் தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக கட்சி மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு அரசியல் களம் குறித்து டெல்லியில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி செல்கிறார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ்-தி.மு.க. மிகவும் நெருக்கமாக உள்ளது. அதேபோல் எங்கள் தலைவர் ராகுலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் நெருக்கமாக இருக்கிறார்கள். எனவே தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் எழாது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின்போது, கடந்த நாடாளுமனற் தேர்தலில் போட்டியிட்ட அதே எண்ணிக்கை குறையாமலும், அதே தொகுதிகளையும் மீண்டும் கேட்டுப்பெற வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் வலியுறுத்த இருப்பதாக கூறியவர், இதுவரை ஒரே தரப்பினர்தான் மீண்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இது மற்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது என்றவர், வருகிற தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளதாகவும், இதுவரை தேர்தலில் போட்டியிடாத இளைஞர்கள்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கட்சியின் தலைமையிடத்தில் வலியுறுத்துவோம் என்றும், குறைந்த பட்சம் 50சதவிகிதம் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க மேலிடத்தில் வலியுறுத்துவோம் என்றார்.
மேலும், நாடாளுமன்றதேர்தலில், தமிழ்நாட்டில், எதிர்பாராத மாற்றம் வரும் என்று பாஜகவினர் கனவு காண்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழக மக்கள் ஏமாற்றத்தையே பரிசாக வழங்குவார்கள் என்றும், அ.தி.மு.க.வை பொறுத்தவரை நம்பகத்தன்மையுடனும், உண்மையுடனும் இல்லை. பா.ஜனதாவுடனான அவர்கள் நிலைப்பாடு என்ன? என்பது தெரியவில்லை. பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினார்கள்? என்பதையும் தெரிவிக்கவில்லை என்றவர், இரு கட்சிகளுக்கு இடையே இன்னும் கள்ள உறவு இருப்பதாகவே தெரிகிறது.
இவ்வாறு கூறினார்.