சென்னை
தமிழக முதல்வர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு குறு வணிகர்களுக்குக் கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த மாதம் தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவைச் சந்தித்தது. தொடக்கத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பிறகு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
”சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள், தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை வெள்ள நிவாரண கடனுதவி திட்டம். ஆண்டுக்கு 6% சிறப்புச் சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.
இக்கடனைத் தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் சுமார் 3 ஆயிரத்து 300 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்று அறிவித்துள்ளார்.