சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று பிற்பகல் 3மணி அளவில் நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா 11 நாள் திருவிழா கடந்த 18ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்ட திருவிழா டிசம்பர் 26ந்தேதி காலை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் பல்லாயிரக்கணக்காணோர் தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.
நடராஜர் மற்றும் அம்பாளுடன் விநாயகர் தேர் வீதியுலா தொடங்கியதை தொடர்ந்து முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து சுவாமிகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். ஆருத்ரா தரிசன திருத்தேரோட்ட திருவிழா! நான்கு வீதிகளிலும் திரண்டுள்ள பக்தர்கள் வீதிகளில் மாக்கோலம் இட்டு சிவ வாத்தியங்கள் இசைத்து சிவதாண்டவங்கள் ஆடி தங்களது பக்தியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ஐந்து தேர்களும் நான்கு மாடவீதிகளை வலம் வந்து மாலை தேர் நிலையை வந்து அடைந்தது.
இதைத்தொடர்ந்து, ஆருத்ரா விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று மதியம் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 3மணி அளவில் ஆருத்ரா தரிசனம் தொடங்கும் என்றும், ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். நடனப் பந்தலில் நடனமாடி, ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.