சென்னை: எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அமோனியா கசிவால் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.
இது குறித்து காவல்துறையினர் விளக்கமளிக்கையில், “கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கப்பலிலிருந்து அமோனியா வாயு எண்ணூரில் உள்ள தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதிலிருந்து குறைவான அளவு அமோனியா திடீரென வெளியேறியதால்தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, நச்சு வாயு கசிவு உண்மை என உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார், அமோனியா கசிவு சரி செய்யப்பட்டுவிட்டதை உறுதி செய்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது, “தனியார் தொழிற்சாலையிலிருந்து கடலுக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பே வாயு கசிவுக்கு காரணம். வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல அமோனியா கசிவை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எண்ணூரின் சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதியில் மிதமான அளவில் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. ஆலை வாசலில் 400 மைக்ரோகிரம்/எம்3 அளவில் இருக்க வேண்டிய அமோனியா 2090 அளவுக்கு இருந்துள்ளது (5.25 மடங்கு அதிகம்). தமிழக கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே அமோனியா வாயு குழாயை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது” என கூறியிருப்பதடன், : வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், சென்னையின் அனைத்து பகுதிகளும் மீண்டு விட்டன. ஆனால், எண்ணூர் பகுதி மட்டும் இன்னும் இதிலிருந்து மீளவில்லை. காரணம் கச்சா எண்ணெய் கழிவுகள்தான். எண்ணூர் பகுதியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. மழை வெள்ளத்தின் போது இந்த ஆலையிலிருந்த எண்ணெய் கழிவுகள் மழை நீருடன் கலந்து வெளியேறியுள்ளது. இதனால் எண்ணூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இது பெரும் பஞ்சாயத்தாக வெடித்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்த சிபிசிஎல் நிறுவனமும் கடலில் கலந்த எண்ணெய் கழிவை அகற்ற தொடங்கியுள்ளன. ஆனால் தற்போது வரை இந்த கழிவுகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்த நிலையில், தற்போது ரசாயண வாயு கசிவு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.