சேலம்: போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.ஜெகநாதனை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம், நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வந்தார்.
பெரியார் பல்கலைக்கழகம் சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் 105 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைப்பு கல்லூரிகளாக இந்த பல்கலைக்கழகத்துடன் இருக்கின்றன. இதுதவிர பல்கலைக்கழகத்தில் 27 துறைகளும் உள்ளன.
இந்த நிலையில், துணைவேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது மற்றும், பெரியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும்போது, பல்வேறு பகுதிகளிலுள்ள நபர்களை இணைத்து வணிக நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தனியார் கல்லூரிகளைத் தொடங்கிக்கொள்வதற்கான அனுமதி வழங்கும் அறக்கட்டளையாக இந்த நிறுவனம் செயல்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்ளை விசாரித்து வந்த சேலம் மாநகர காவல்துறையினர், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை இன்று திடீரென கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர் நலச்சங்க ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் துணைவேந்தரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.