பாட்னா: பீகார் மக்கள் குறித்துதயாநிதி மாறன் பேசிய வீடியோ வைரலான நிலையில், 15 நாளில் மன்னிப்பு கேட்குமாறு பீகார் மாநில காங்கிரஸ் பிரமுகர் சந்திரிக்கா பிரசாத் யாதவ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இந்தி குறித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகும் நிலையில், இந்த விவகாரத்தில் 15 நாட்களில் தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் காங்கிரஸ் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் சந்திரிக்கா பிரசாத் யாதவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதுபோல தயாநிதி மாறனுக்கு பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேச்சும்போது, இந்தி குறித்துப் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது ரைவலாகி வருகிறது. அதில், “உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இந்தி மொழியை மட்டும் படிப்பவர்கள் பிழைப்பதற்காகத் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்து சாலை அமைத்தல், கட்டடத்தொழில், கழிவறை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஆங்கிலம் கற்றவர்கள் கைநிறைய ஊதியத்துடன் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகின்றனர்” எனப் பேசி இருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவை தற்போது பாஜகவினர் மீண்டும் வைரல் செய்து ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மக்களின் மொழி உணர்வைக் கேலி செய்யும் விதமாகவும், மொழி வெறுப்பை உண்டாக்குவதாகவும் திமுக எம்பி தயாநிதியின் கருத்து அமைகின்றது என்று கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தயாநிதி மாறனின் கருத்துக்கு திமுக கூட்டணி கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனாதளம் கட்சி தலைவரும், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து எம்.பி தயாநிதி மாறனின் கருத்து முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தல்ல. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி எப்படி சமூக நீதியைப் பின்பற்றுகிறதோ, அதேபோல் எங்களது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் சமூக நீதியைப் பின்பற்றும் கட்சியாகும். இந்த நாட்டில் மக்கள் எங்குச் சென்றும் வேலை பார்ப்பதற்கான சுதந்திரம் உள்ளது என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும். அந்த வகையில் நாங்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மரியாதை கொடுத்து வருகிறோம். மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், தயாநிதி மாறன் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் காங்கிரஸ் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் மற்றும் கல்வியாளரருமான சந்திரிக்கா பிரசாத் யாதவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், “ஹிந்தி மொழி மற்றும் உத்திர பிரேதசம், பீகார் மக்களை இழிவுபடுத்திப் பேசிய தயாநிதி மாறன், அவர் பேசிய கருத்துக்கு 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சந்திரிக்கா யாதவ் கூறுகையில், எம்பி தயாநிதி மாறன் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்களில் அரை சதவிகிதம் பேர் பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு காவல்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் உயரிய பொறுப்புகளில் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய நபர்களில் பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்” என்று அவரது கண்டனங்களைப் பதிவு செய்தார்.
சர்ச்சைக்குரிய வகையில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் சமீபகாலமாக திமுகவினர் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, சனாதன கருத்து குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது,. திமுக கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், அரசியல் வட்டாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது தயாநிதி எப்போதோ பேசிய கருத்தும் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.