திருப்பாவை – பாடல் 9  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 9 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 9.

திருப்பாவை பாடல் 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்

ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பொருள்:

தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம். அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர, அழகிய தூபம் மணக்க, அங்கு போடப்பட்டுள்ள சப்பர மஞ்சத்தில் ஒய்யாரமாக தூங்கும் மாமன் மகளே, எழுந்து வந்து கதவைத் திறக்க மாட்டாயோ! எங்கள் அன்பு மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாமல் நித்திரையில் இருக்கிறாள்.

அவள் என்ன ஊமையா, செவிடா, ஓயாத தூக்கத்தில் இருக்கிறாளா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.