சென்னை: மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தக்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என பபாஸி அறிவித்துள்ளது.
47-வது சென்னை புத்தகக் காட்சி (Chennai Book Fair) சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அடுத்த மாதம் (ஜனவரி ) 3 ஆம் முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது.
இந்த புத்த காட்சியை ஜனவரி 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அவரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த புத்தகக் காட்சியானது தினமும் வேலை நாளில் காலை 11 மணி முதலும், விடுமுறை நாளில் காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன. மேலும், ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை இடம்பெறுகிறது.