சென்னை: தென்மாவட்டங்களுக்கு மழை அபாயம் நீங்கியது என வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். அதுபோல சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  பேய்மழை கொட்டியது. தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழைக்கு, இதுவரை கண்டிராக அளவுக்கு இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின,  இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள  ஏரி, குளம், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது.

பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளதால் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.  அங்கு மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த மழை வெள்ளப்பாதிப்புகள் குறித்து, இந்திய, தமிழ்நாடு வானிலை ஆய்வு மையங்கள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்ட நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர்களும் தங்களது ஆய்வறிக்கை குறித்து வெளியிட்டு, மக்களை எச்சரித்து வந்தனர்.  அதுபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் பல்வேறு தகவல்களை தெரிவித்து மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தி இருந்தார்.

 தற்போது, தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை குறைந்து, வெள்ளம் வடியத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மழை அபாயம் நீங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல,   நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மழை அபாயம் நீங்கியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் சமூகவலைத பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், வரலாற்று சிறப்புமிக்க மழையை தந்த (தூத்துக்குடி மற்றும் நெல்லை) காலங்காலமாக பேசப்படும் சுற்றறிக்கை நீங்கி மழையும் செல்கிறது நிவாரணப் பணிகள் தற்போது மைய அரங்கேற உள்ளன. வேதாரநயம், கோடியக்கரை – ராமேஸ்வரம் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும். சென்னை வறட்சியான வானிலை தொடரும் என தெரிவித்துள்ளார்.