திருவண்ணாமலை
இன்றுடன் திருவண்ணாமலையில் தீபக் காட்சி நிறைவு பெறுகிறது.
கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாகக் கடந்த 26 ஆம் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் இந்த மகா தீபம் மலை உச்சியில் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும்.
தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இன்றுடன் மலை உச்சியில் காட்சி தரும் மகா தீபம் நிறைவடைகிறது. நாளை காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியிலிருந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குக் கொண்டு வரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.
வரும் 27-ந் தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் போது மகா தீப மை (தீப சுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.