சென்னை: சென்னையில் மழைநீர் வடிக்கால் பணிக்கு  ரூ.4000 கோடி செலவழித்தாக திமுக அரசு கூறி வரும் நிலையில், அதற்கு பதிலாக  400 படகுகளை வாங்கி கொடுத்திருக்கலாம் என்றும், சென்னையில் மழை பாதிப்பில்லை என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த திமுக அரசு முயற்சி செய்து வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்.

சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த மழை காரணமாக, பல பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு சுமார் 4000 கோடி செலவு செய்துள்ளதாக தமிழ்நாடு அமைச்சர்கள், மேயர் கூறி வந்த நிலையில், மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது, ஆட்சியாளர்களை கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இநத் நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஜெயக்குமார், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. “மழைக்கு முன்னெச்சரிக்கை எடுப்பது அரசின் கடமை. வரும் முன் காப்பவன் தான் அறிவாளி ஆனால், அதை செய்ய திமுக அரசு தவறி விட்டது.

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும். கால்வாய்களை தூர் வார வேண்டும். ஆனால், அதை செய்யாததால், தற்போது மீண்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த விஷயத்தில்  இதில் தோல்வி அடைந்துவிட்டது.  இதுகுறித்து பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருவதால், விமர்சனங்களை தவிர்க்க பிரதான சாலைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம்  அளிக்கும் திமுக அரசு, குடியிருப்பு பகுதிகளை கைவிட்டுவிட்டது என குற்றம் சாட்டினார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு  4000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக சொன்னார்கள் அதுவெல்லாம் என்ன ஆயிற்று? சென்னை மாநகராட்சி தூங்கிவிட்டது. முதலமைச்சர் தொகுதியே நீந்தி செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது. சென்னையை விட சென்னை புறநகர் மிக மோசமான நிலையில் உள்ளது.

இந்த விஷயத்தில், அமைச்சர்கள் சொல்லும் பொய்யை போல யாரும் சொல்ல முடியாது. இப்படி பொய் பேசுகிறோமே மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட இல்லை. 4000 கோடி செலவு செய்ததற்கு 400 படகு வாங்கி கொடுத்திருந்தாலும் மக்கள் பயனடைந்திருப்பர்.

நிர்வாக திறமை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது. வானிலை மையம் இன்று மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுத்த போதிலும் பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லூரிகளுக்கு ஏன் விடுமுறை அளிக்கவில்லை அவர்கள் எப்படி கல்லூரிகளுக்கு செல்வார்கள் என்பதை அரசு யோசிக்க வேண்டாமா?

சென்னையில் பாதிப்பில்லை என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த திமுக அரசு முயற்சிக்கிறது. முதலமைச்சர் வார்த்தைக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அதற்கான காரணம் தெரியவில்லை. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் முதலமைச்சர் அதனை அதிகாரிகள் செய்கிறார்களா என கண்காணிக்க வேண்டும். அதனை முதலமைச்சர் செய்வதில்லை. அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மீது மரியாதையே இல்லை.

இவ்வாறு கூறினார்.

ரூ.4ஆயிரம் கோடி ஸ்வாஹா? வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை! பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம்..