‘வீகன்’ எனப்படும் 100 சதவீதம் தாவர உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணத்தை உணவுப் பாதுகாப்புத்துறை பெருமளவு குறைத்துள்ளது.
இதுவரை இந்நிறுவனங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக ரூ. 25000 விண்ணப்பக் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் இனி பொருட்களின் எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ. 10000 என்று குறைத்துள்ளது.
இதனால் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட கால்நடை சார்ந்த பொருட்களை விட தாவர உணவுப் பொருட்களின் (Vegan) தயாரிப்பு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீகன் உணவு வகைகளுக்கான உரிம கட்டணத்தில் மாற்றம் செய்துள்ள உணவுப் பாதுகாப்புத் துறை சைவ மற்றும் அசைவ உணவகங்கள் மற்றும் உணவு தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனங்களின் தளஅமைப்பு திட்டம் (layout plan), தேவையான குறைந்தபட்ச இடவசதி உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து உணவகங்களுக்கு பெறப்படும் உரிம விண்ணப்பத்தில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
இதனால், வீகன் உணவு தயாரிப்பு நிறுவனங்களைப் போல கால்நடை சார்ந்த உணவு தயாரிப்பு நிறுவனங்களும் பெருமளவு நன்மையடையும் என்று கூறப்படுகிறது.