சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது அந்த பகுதி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பட்டா நிலம் 3774 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 1972 ஏக்கர் என மொத்தம் 5746.18 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 4 ஆயிரத்து 70 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான நிலையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டிற்கு 10 கோடி விமான பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி, பரந்தூர் மற்றும் பக்கத்தில் உள்ள 13 கிராம மக்கள் கடந்த ஓராண்டை கடந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், எதிர்ப்பை மிறி, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட்டே தீரும் என திமுக அரசு பிடிவாதமாக உள்ளது. தொடர்ந்து, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. பரந்தூர், விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த குழு அந்த பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று கள ஆய்வு செய்து. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணதாங்கள் – பரந்தூர் செல்லும் சாலையில் படுத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களை காவல்துறையினர் கைது செய்து, போராட்டத்தை ஒடுக்கினர்.
இந்த நிலையில், தற்போது பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலத்தை கையப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே நிலம் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்த நிலையில், விமான நிலையம் அமையும் நிலங்களை எடுப்பதற்கு, தமிழக அரசு நிர்வாக அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தாலூக்காவில் உள்ள பரந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 20 கிராமங்களில் 3774 ஏக்கர் நிலங்களை கையப்படுத்தும் பணியை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பட்டா நிலம் 3774 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 1972 ஏக்கர் என மொத்தம் 5746.18 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், நிலம் எடுப்பதற்கான திட்டத்தில் பணியாற்றுவதற்கு, முதற்கட்டமாக இரு தாசில்தார்கள், இரு துணை தாசில்தார்கள் என நான்கு பேர் நியமனம் செய்து கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
நில எடுப்பு செய்ய, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள் தலைமையில், 26 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், சர்வேயர் உள்ளிட்டோர் இடம் பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பரந்துார் விமான நிலைய நில எடுப்பு திட்டத்திற்கு, வெளி மாவட்டத்திலிருந்து கடன் அடிப்படையில் தாசில்தார்களை பணியமர்த்த, தமிழ்நாடு வருவாய்த் துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.