அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல் மாவட்டம்.
முற்காலத்தில் வணிகம் செய்யச் சென்ற சில வணிகர்கள் இத்தலம் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இவ்விடத்திற்கு வந்தபோது, இரவாகிவிட்டது. எனவே, இங்கேயே தங்கினர். அப்போது தாங்கள் கொண்டு வந்திருந்த ஒரு கல்லை நாவல் மரத்தின் அடியில் வைத்துவிட்டு, தூங்கி விட்டனர். மறுநாள் காலையில் அவர்கள் கிளம்பியபோது, கல்லை எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது பக்தர் ஒருவர் மூலமாக வெளிப்பட்ட கருப்பசுவாமி, தானே கல் வடிவில் இருப்பதாகவும், தன்னை அவ்விடத்திலேயே வைத்து கோயில் எழுப்பும்படியும் கூறினார். பக்தர்களும் கல்லை அப்படியே வைத்து, கருப்பசாமியாகப் பாவித்து வணங்கினர்.
இவர் நாவல் மரத்தின் அடியில் குடிகொண்டதால் “நாவலடியான்” என்றும், “நாவலடி கருப்பசாமி” என்றும் பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.
நாவலடி கருப்பசாமி, மேற்கு நோக்கி இருக்கிறார். இவர் சிறிய பள்ளத்திற்குள் பீட வடிவில் காட்சி தருவது விசேஷமான அமைப்பு. ஆதி காலத்தில் வணிகர்கள் கல் வைத்த இடத்தை சுற்றி கோயில் கட்டப்பட்டுள்ளதால், சுவாமி பள்ளத்திற்குள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பீடத்திற்கு சந்தனத்தில் கண், மூக்கு, நெற்றிப்பொட்டு வைத்து சுவாமி போல அலங்கரிக்கிறார்கள். தலைப் பாகையினை இதற்கு மேலேயே கட்டுகின்றனர். இவரிடம் கோரிக்கை வைப்பவர்கள் தங்களது வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, நாவல் மரத்தில் கட்டிவிடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களை கோயிலில் இருந்து அகற்றப்படுவது கிடையாது. கோயில் வளாகத்திலேயே வைத்துவிடுகின்றனர்.
இவை சுவாமிக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட மனுக்களாகக் கருதப்படுவதால், யாரும் பயத்தால் எடுப்பதில்லை. இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் கருப்பசாமி பீடம் இருக்கிறது. நாவலடி கருப்ப சாமியிடம் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள், இந்த பீடத்தில் கிடா மற்றும் சேவலை நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். கருப்பசாமி கோயிலுக்கு எதிரே வெளியில் உள்ள அரசமரத்தில் செருப்பு காணிக்கை செலுத்தும் வழக்கமும் இருக்கிறது.
இக்கோயிலில் உற்சவர் சன்னதிக்கு எதிரே, பிரகாரத்தில் அருகருகில் மூன்று வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அருகில் இரண்டு சிறிய குதிரை வாகனங்கள் இருக்கிறது. தெரிந்தே தவறு செய்துவிட்டு, மன்னிப்பு வேண்டுபவர்கள் இந்த சூலங்களில் எலுமிச்சம்பழத்தை குத்தி வைத்து, உப்பைக் கொட்டி அதன்மேல் “இனிமேல் தவறு செய்யமாட்டேன்” என சத்தியம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு சத்தியம் செய்ததற்கு சாட்சியாக சுவாமியின் வாகனங்களான குதிரைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த வேலை, “சக்தி வேல்” என்றும் “சத்திய வேல்” என்றும் சொல்கிறார்கள். பிறரை நம்பி ஏமாற்றப்பட்டவர்களும் இங்கு சுவாமியை வணங்கி, வேலில் எலுமிச்சம்பழம் குத்தி வழிபடுகிறார்கள்.
இக்கோயிலின் பிரதான வாசல் வடக்கு திசையில் உள்ளது. இந்த வாசலுக்கு நேரே அம்பாள் செல்லாண்டியம்மன் இருக்கிறாள். பீடத்தில் அமர்ந்திருக்கும் இவள் கைகளில் உடுக்கை, சூலம், மலர் மற்றும் குங்குமம் வைத்து, அசுரனை சம்ஹாரம் செய்தபடி காட்சி தருகிறார். முன்மண்டபத்தில் சப்தகன்னியர் இருக்கின்றனர். கோயில் முகப்பில் கருப்பசாமிக்குரிய மூன்று குதிரை வாகனங்கள் இருக்கிறது. இதற்கு அருகில் நந்தி, சிம்மம், குதிரை ஆகிய மூன்று வாகனங்கள் இருக்கிறது. கோயில் வளாகத்திலுள்ள நாவல் மரத்திற்கு அடியில் காவல் தெய்வங்கள் இருக்கிறது. கருப்பசாமி உற்சவர் தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் இருக்கிறார். இவருடன் மனைவியர் பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் இருக்கின்றனர். மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இவரே விழாக்காலங்களில் வீதியுலா செல்கிறார்.
திருவிழா:
இக்கோயிலில் எல்லா நாளுமே சுவாமிக்கு விசேஷ வழிபாடுகள் நடக்கிறது. எனவே இவருக்கென தனியே விழா எதுவும் கிடையாது. தினமும் திருவிழா போலவே இவருக்கு விசேஷ அலங்காரம் மற்றும் வைபவங்கள் நடக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தொடர்ச்சியாக படையல் படைத்து வழிபடுகின்றனர். எனவே இவருக்கு “படையல்சாமி” என்றொரு பெயரும் உண்டு.
வேண்டுகோள்:
பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் ஆடு, சேவல் பலி கொடுத்தும், மணி கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்