பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடுவதை அடுத்து அந்நிறுவனத்திற்கு அபராதம் விதி்க்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பதாஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து என்ற பெயரில் சில பொருட்களை விற்று வருவதாகவும் அவை அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையில் தீர்வுகாண முடியாத நோய்களுக்குக் கூட சிறந்த நிவாரணம் அளிப்பதாக பல்வேறு தவறான தகவல்களுடன் விளம்பரம் செய்வதை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் அஷானுதின் அமான்ஷா, பிரசாந்த் குமார் மிஸ்ரா பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை பதாஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையென்றால் ஒவ்வொரு பொருட்களின் வாளம்பரத்தின் மீதும் கோடி ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரித்தது.
ஏற்கனவே, பதாஞ்சலியின் ஆயுர்வேத மருந்து கொரோனாவை குண்படுத்துவதாக வெளியான விளம்பரத்தை எதிர்த்து தொரப்பட்ட வழக்கு விசாரணையின் போது கடந்த ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி பதாஞ்சலியைக் கண்டித்ததுடன் பாபா ராம்தேவ் அலோபதி சிகிச்சை பெற்றதை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அதே நிறுவனம் மீது இந்திய மருத்துவ சங்கம் மற்றொரு வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.