திருவண்ணாமலை: அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரியில் வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான அருணை கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே சோதனை நடந்த போது சில அறைகள் சீல் வைக்கப்பட்டன. அந்த அறைகளை தற்போது திறந்து, அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை காரணமாக பாதுகாப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திமுக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவருக்கு சொந்தமாக ஏராளமான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு மருத்துவக் கல்லூரிகளும், நிறுவனங்களும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. இங்கு வரி ஏய்ப்பு நடைபெற்றதாக கூறி, வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 2ந்தி முதல் தொடர்ந்து 5 நாட்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வசிக்கும் விழுப்புரம், சென்னை, கோவை, கரூர் என பல இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும், அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.
கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு நெருக்கமான காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின்போது, ரூ.18 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இதையடுத்து, காசா கிராண்ட் நிறுவனம் ரூ.700 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 கோடியும், அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள விற்பனை ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கிடைத்த ஆவணகளை ஆய்வு செய்ததைக்கொண்டு, இன்று மீண்டும் திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது.