சென்னை: நடிகை திரிஷா குறித்து வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையான நிலையில், அவர்மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, அவரை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நுங்கம்பாக்கம், மற்றும் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் இரு பிரிவுகளிம் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து மன்சூர் அலிகான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
தென்னிந்திய திரையுலகில், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 40 வயதை கடந்தாலும், இன்னும் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கு காரணம், அவர் வைத்திருக்கும் சிக்கென்ற உடல்வாகு என கூறப்படுகிறது. மேலும், அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவர் சீமிபத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர்களுடன் நடிகர் மன்சூர் அலிகானும், இருதயராஜ் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் யுடியூப் வீடியோ ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், திரிஷாவுடன் தனக்கு ஒரு காட்சி கூட இல்லை என்பதை, மிகவும் மோசமான விதத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த வீடியோ வைரலானது. இதை பார்த்த திரிஷா, தன்னுடைய ஆதங்கத்தையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தி இருஐந்தார். அவருக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ, ரோஜா, லோகேஷ் கனகராஜ், உள்பட பல பிரபலங்கள், நடிகர் சங்கம் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்தன.
மேலும், நடிகர் சங்கம், இந்த விஷயம் தொடர்பாக மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கூறியது. மேலும், தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது பழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு அறிவுறுத்தியயது.
இதைத்தொடர்ந்து, நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என்று கூறியதுடன், என்னிடம் நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். நான் திரிஷா குறித்து தவறாக எதுவும் கூறவில்லை. சர்ச்சை பேச்சு வீடியோ குறித்து என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார். நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது. கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். என்னை கருப்பு ஆடாக காட்டிவிட்டு நடிகர் சங்கம் நல்ல பேர் எடுத்து கொள்கிறார்கள்.
நான் நடிகர் சங்கத்திற்கு போன் செய்த போதும் யாரும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நான் நிச்சயம் வழக்கு தொடர்வேன். என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று கூறிய அவர் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்புக் கேட்கக் கூடிய ஜாதியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எரிமலை குமுறினால் எல்லோரும் துண்டைக்கானோம், துணியகாணோம் என ஓடிப்போய் விடுவீர்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி, மன்சூர் அலிகானுக்கு 41ஏ எனப்படும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.