கோவை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ப்ளூ காய்ச்சல்  காரணமாக  பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என  கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், மழைக்கால நோய்களும் பரவி வருகின்றன. பல மாவட்டங்களில் ப்ளு காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்பட பல நோய்கள் பரவி வருகின்றன. இதைத்தடுக்க மாநில அரசு காய்ச்சல் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில்,  ப்ளூ காய்ச்சல் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,  கோவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் தகுந்த மருத்துவரை அணுகி உரிய மருந்துகளை சாப்பிட வேண்டும்; குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் குடிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விடுத்துள்ள அறிவுறுத்தலில், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியவை பாதிப்பின் அறிகுறிகள் என்றும்,  நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்களில் குணமடைந்து விடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ளவேண்டும் எனவும் வெளியில் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.