நியூயார்க்
இரு சர்வதேச எம்மி விருதுகளை இந்தியா வென்றுள்ளது.
நேற்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 51 ஆவது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்டாண்ட்அப் காமெடியன் வீர் தாஸ், சிறந்த நகைச்சுவைக்கான எம்மி விருது பெற்றார். அவருக்குச் சிறந்த காமெடி பிரிவில் நெட்பிளிக்சின் “வீர் தாஸ்: லேண்டிங்” என்ற நகைச்சுவை நிகழ்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை “டெர்ரி கேர்ள்ஸ் சீசன்-3” என்ற பிரிட்டிஷ் நகைச்சுவை தொடருடன் இந்த விருதை வீர் தாஸ் பகிர்ந்துகொண்டார். நகைச்சுவை பிரிவில் சர்வதேச எம்மி விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை வீர் தாஸ் பெற்றுள்ளார்.
வீர் தாஸ் தமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இது தனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நகைச்சுவைக்குமான மைல்கல் என்றும் கூறினார். மேலும் ‘எனது அணி மற்றும் நெட்பிளிக்ஸ் இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்த விருது எனது பணிக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு கதைகள் மற்றும் குரல்களின் கொண்டாட்டம்’ என்றும் வீர் தாஸ் குறிப்பிட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏக்தா கபூருக்கு சர்வதேச எம்மி இயக்குநரக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது இதன்மூலம் இந்தியா இம்முறை இரு சர்வதேச எம்மி விருதுகளை வென்றுள்ளது.