சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 3வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மூச்சு விட சிரமப்படுவதால், செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்பு சளியால் இடைவிடாது இருமல் இருந்து வந்ததன் காரணமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை இரவு, உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து மூன்றாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், மூச்சு விடுவதில் சீரான நிலை இல்லாமல் அவஸ்தை படுவதால், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போது விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல் நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை கண்காணிக்கவே ஐசியூ அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், நுரையீரல் சளி பாதிப்பால் மூச்சுவிடுவதில் லேசான சிரமம் இருந்தாலும் தாமாக சுவாசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.