சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில், 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 27மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய்த்துறை சார்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. . இந்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி வாக்கில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மேலும் மேலும் 5 நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கனமழை எதிரொலியாக 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் அவசர கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், கனமழை மற்றும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளவும், சமாளிக்கவும் போதுமான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.